பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு மக்களுக்கு உதவுங்கள்!
அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு, இந்த மக்களுக்கு உதவுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு (செவ்வாய்க்கிழமை) சென்று பார்வையிட்ட நாமல் ராஜபக்ஷ அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இருந்த காலத்தில் நாம் வடக்கில் பல வீடுகளை நிர்மாணித்தோம்.
இந்திய வீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
அரசியல் போட்டிக்கு மத்தியில் அவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால் யாருக்கு பெயர் புகழ் கிடைக்கவேண்டும் என்பதிலேயே பிரச்சினை இருக்கிறது.
அரசாங்கம் பெயர் எடுக்க வேண்டுமா அல்லது இந்த பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் பெயர் எடுக்க வேண்டுமா என்று போட்டி உள்ளது.
மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவை அனைத்தும் செய்யப்படுவதாக தெரிகிறது.
மக்களிடம் வாக்குகளைப் பெற்றதன் பின்னராவது மக்களுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளைப் பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு, இந்த மக்களுக்கு உதவுங்கள். வாக்களித்த மக்களுக்கு நீங்கள் கைக்கொடுக்க வேண்டிய நேரம் இது.
இங்கு அரசியல் கட்சி முக்கியமில்லை. மக்களுக்கான உதவிகளே முக்கியமாகவுள்ளது. எனவே இவர்களுக்கு உதவுமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.