இங்கிலாந்து தம்பதியர் அவுஸ்ரேலியாவில் பலி!
பிரித்தானியாவைச் சேர்ந்த இருவர், அவுஸ்ரேலியாவில் ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அவர்களுடைய குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக கோ பன்ட் மீ என்ற இணையத்தளம் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் நிதியை சேகரித்துள்ளன.
முன்னாள் பிரபல ட்ரேடோன் நகர காற்பந்தாட்ட வீரர் ஜேசன் பிரான்சிஸ் (வயது-29) என்பவர் பேர்த், ஸ்காபொரொவில் உள்ள அவரது வீட்டின் அருகில் வைத்து கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார்.
அவரது துணைவியான அலிஸ் ரொபின்சனுடன் சென்று கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தான் மிகவும் மனமுடைந்து போயுள்ளதாக தெரிவித்திருந்த அந்த பெண் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமல் போயிருந்த அந்த பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு அவுஸ்ரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்காபொரொவில் உள்ள ஸ்டேன்லி வீதியில் வைத்து 18 வயது மதிக்கத்தக்க சாரதியொருவர் பாதசாரி ஒருவர் மீது மோதியமை தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பிரான்சிஸ் தனது நண்பர்களுடன் காற்பந்தாட்ட கழகத்திற்கு சென்று கடந்த சனிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஜேசன் பிரான்சிஸ் மற்றும் அலிஸ் ரொபின்சனுக்காக சுமார் 31,000 அவுஸ்ரேலிய டொலர்கள் (£17,259) நேற்றைய கிறிஸ்மஸ் நாளில் சேகரிக்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
கோ பன்ட் மீ இணையத்தளம் மூலமாக சேகரிக்கப்பட்ட இந்த பணத்தை எந்தவித கட்டண அறவீடும் இன்றி குறித்த தம்பதியரின் உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக வழங்கவுள்ளதாக அந்த இணையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.