ரணில் – சபாநாயகர் இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்று இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் நீடித்ததாகவும், இது முடிவடைந்த உடன் சபாநாயகர் வெளிநாடு பறந்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டுக்குரிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியுடன் முரண்படாமல் ஆட்சியை முன்னெடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும், இக்கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிரதமரை தனிப்பட்ட ரீதியில் சபாநாயகர் சந்தித்தார் எனவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் அதற்கு அடுத்தப்படியாக உயர் பதவிகளை வகிக்கும் இருவரும் இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமையானது மைத்திரி தரப்பை பலகோணங்களில் சிந்திக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.