இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை!
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறிவேப்பிலைக்கு இவ்வாறான தடையினை விதித்துள்ளது.
இதேவேளை இத்தாலி, சைப்ரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை கடனியா, சிசிலி மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கை கொன்சியூலேட் காரியாலயங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், அதிகளவான கறிவேப்பிலைகளை கொண்டு வருகின்றமையானது, ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் உணவு பொருட்களின் ஏற்றுமதியில் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தலாமென ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் காரியாலயங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, இதன் காரணமாக இலங்கையிலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பிரத்தியேக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்த இலங்கையர்கள் பலர் பெருமளவான கறிவேப்பிலைகளை கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.