புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி!

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி!

கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிய வருகிறது.

தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அமைச்சர் கபீர் ஹசீமிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவனெல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்கமாறு அவர் கோரியுள்ளார்.

பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாவனெல்ல பிரதேசத்தின் பல இடங்களில் உள்ள பௌத்த சிலையை உடைத்ததாக முஸ்லிம் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் சந்தியில் உள்ள பௌத்த சிலைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

அதில் ஒருவர் அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போதிலும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எம்.அஷ்பர் என்ற சந்தேக நபரை தாக்கிய பிரதேச மக்கள் பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த பிரதேசத்தில் இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களுக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பிருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை சிலை உடைப்பு விவகாரம் மத கலவரத்தை ஏற்படுத்தும் அளவு செல்லும் என்பதனால் அமைதியாக இருக்குமாறும் தவறு செய்தவர்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net