யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் தற்காலிகமாக பதவி நீக்கம்!

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் தற்காலிகமாக பதவி நீக்கம்!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார்.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். அதனால் குறித்த பெண் 15 ஆயிரம் ரூபாயினை வழங்கியுள்ளார்.

இருந்த போதிலும் மிகுதி 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை விரைந்து தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

அந்நிலையில் குறித்த பெண் கிராம சேவையாளர் தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்துவது தொடர்பிலும் தான் ஏற்கனவே 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தொடர்பிலும் யாழ்.மாவட்ட செயலருக்கு முறையிட்டு உள்ளார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட செயலர் நிர்வாக நடைமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வரையில் குறித்த கிராம சேவகரை தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் மாவட்ட செயலரிடம் கேட்ட போது, மக்கள் சேவைக்காக எந்தவொரு உத்தியோகஸ்தரும் பணம் கோர முடியாது.

அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால், அது தொடர்பில் நேரடியாகவோ , தபால் மூலமாகவோ என்னிடம் முறைப்பாடு செய்ய முடியும்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு , முறைப்பாடு உண்மை என எண்பிக்கபட்டால் தகுதி தராதரம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்தார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net