கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்!
கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வேண்டுகொளுக்கு இணங்க ஜனாதிபதியின் பேரில் காணிகள் சில விடுவிக்கப்பட்டன இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்ததால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து இணக்க அரசியல் ஊடாக தீர்க்க முற்பட்டோம். அதன்படி, காணி விடுவிப்பு விடயத்தில் முதற்கட்டமாக தனியார் வாழ்வாதார காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனெரல் அருனவும் கலந்து கொண்டு 8.5 ஏக்கர் காணிகளை நேற்றுமுந்தினம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
மேலும், விடுவிக்கப்படாமல் இருக்கும், பொலிஸ் வசமுள்ள அரச நிறுவனத்துக்கு சொந்தமான காணிகள் 37.8769 ஏக்கர், பொலிஸ் வசமுள்ள தனியார் காணி 29.125 ஏக்கர் 134 பேர் உரிமையாளர்கள்.
இராணுவம் வசமுள்ள அரச நிறுவனத்துக்கு சொந்தமான காணிகள் 91.8125 ஏக்கர், இராணுவம் வசமுள்ள தனியார் காணிகள் 31.375 ஏக்கர் 112 பேருக்கு சொந்தமானது.
அத்துடன், கடற்படை வசமுள்ள அரச நிறுவனத்துக்கு சொந்தமான காணிகள் 540.34125 ஏக்கரும் தனியாருக்கு சொந்தமான காணிகள் 2.5 ஏக்கர் 3 வருக்கு சொந்தமானது.
இவ்வாறு விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை விடுப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எதிவரும் காலங்களில் முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.
மேலும், நான் ஜானதிபதியோடு இணைந்தது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல் தலைமைகள் நான் எனது இனம் சார்ந்த விடயத்தில் இது வரை சற்றும் பிசகாமல் நிற்கிறேன் என்பதை உணர வேண்டும் .
இந்த நாட்டை யார் ஆண்டாலும் என் இனத்தின் இருப்பு பாதுகாக்கப்பட நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம்.மற்றைய சமூகங்கள் , அவர்கள் சார்ந்த அரசியல் வாதிகள் அதைத்தான் செய்கிறார்கள் .
பேச்சை விட்டுவிட்டு மக்களை காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். மேலும், இது வெறுமனே ஆரம்பம் மட்டும் தான் எதிர்காலத்தில் இன்னும் நிறைய நடக்க இருக்குறது. என அவர் தெரிவித்துள்ளார்.