மைத்திரி – மகிந்தவிற்கு பீதியை ஏற்படுத்திய ரணில்!
அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,
“ஒக்டோபர் 26 சூழ்ச்சியின் பின்னணியில் மைத்திரி – மகிந்த மட்டும் தொடர்புப்படவில்லை.
அவர்கள் இருவரின் முழுக் குடும்பமும் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளது.
அத்துடன், மகிந்த அணியை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரின் விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலரும் இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு இறுதியில் தப்பியுள்ளனர். கட்சியின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு அவர்களின் விபரங்களை வெளியிடமாட்டேன்.
இந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடினமாக உழைத்தார்கள்.
நீதித்துறையில் அவர்கள் நம்பிக்கை வைத்து செயற்பட்டார்கள். அவர்களின் எண்ணத்தின்படி நாம் வெற்றியடைந்தோம்.
நாம் எதிர்பார்த்த மாதிரி சர்வாதிகாரம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றது.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.