மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பின் போது மூன்று உணவு விடுதிகள் மூடல்!
மட்டக்களப்பு மாநகரில் பொதுமக்களின் நன்மை கருதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட பாரிய சோதனை நடவடிக்கைகள் காரணமாக சுகாதாரத்திற்கு உதவாத நிலையில் இருந்த மூன்று உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த சோதனை நடவடிக்கையானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலனின் தலைமையிலான பொதுச்சுகாதார குழுவினரே இந்த சுற்றுவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது 14க்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், ஆறுக்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகளும், இரண்டு வெதுப்பகங்கள், மூன்றுக்கும் மேற்பட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்பின்போது சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இல்லாத மூன்று உணவகங்கள் மூடப்பட்டதுடன், இரண்டு பலசரக்கு கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டு முறையாக சுற்றுத்துண்டு இடப்படாத நிலையில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரண்டு களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுவருடத்தினை முன்னிட்டு பெருமளவான மக்கள் மட்டக்களப்பு மாநகருக்கு வந்துசெல்லும் நிலையில் அவர்கள் சிறந்த பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்பதற்காகவும்,சிறந்த உணவுவகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த சுற்றிவளைப்புகள் பொதுச்சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.