கூட்டமைப்பை திருப்திப்படுத்தும் அரசியலமைப்பிற்கு இடமில்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையும் இந்த ஆண்டில் மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”இந்த வருடம் மிக முக்கியமான ஒரு வருடமாகவே கருதப்படுகிறது. தேர்தல்களுக்கு ஆயத்தமாகும் ஆண்டாக இருக்கிறது.
மாகாணசபைத் தேர்தல் இந்தாண்டில் நடைபெறவுள்ள அதேநேரம், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.
இந்தநிலையில், இவற்றை புறக்கணிப்பதற்காக பொய்களைக் கூறவேண்டாம் என நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களுக்கு அஞ்சி வருகிறது. இதனாலேயே, நீதிமன்றுக்குச் சென்று தேர்தலுக்கு செல்வதை பிற்போட்டது.
இன்று தனிப்பெரும்பான்மையான அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில், நாட்டு மக்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்.
மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கும் போராட்டத்தில் நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம். மேலும், அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தற்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காக அவர்களின் கோரிக்கையை, அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
ஆனால், தமிழர்களின் நலனுக்கு அப்பால் பிரதமர் ஒருவரை பாதுகாப்பதற்காக, நீதிமன்றிலும் நாடாளுமன்றிலும் செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா என்பதில் எமக்கு பிரச்சினைகள் இருக்கின்றன.
இவர்கள், எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு உதவினார்கள். பிரதமர் ஒருவரை நியமிக்க உதவினார்கள். இதுதான் அவர்களின் செயற்பாடாக இருந்தது.
இதுவரை தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளாது, தமது லிபரல் கொள்கைகளுக்கு இணங்கவே கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் செயற்பட்டார்கள்.
அதேபோல், லக்ஷ்மன் கிரியெல்ல எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று கூறுகிறார்.
இத்தரப்பினருக்கும் நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது, தமிழர்களுக்கு எந்தவொரு பலனுமற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தையும் நாடாளுமன்றில் நிறைவேற்ற நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
இதனால், தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவரவேண்டுமாக இருந்தால் அதனை மக்களின் ஆணைக்கு இணங்கவே கொண்டு வரவேண்டும்.
இதற்கு மக்களின் விருப்பம் அவசியமாகும். இதனை மீறி ஒருபோதும் தன்னிச்சையான ஒரு அரசியலமைப்பை கொண்டுவர நாம் இடமளிக்கமாட்டோம்’ என்றார்.