யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் அவர் வைத்தியரை நாடவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். டெங்கு நோயின் தாக்கமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வடக்கில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த அடைமழையால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நீர் தேங்கிக் காணப்படும் இடங்களிலிருந்து டெங்குக் குடம்பிகள் உருவாகி, டெங்கு நுளம்புகளும் பெருகியுள்ளன.
இந்நிலையில், மக்கள் இவற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நுளம்புகள் பெருகுவதை கட்டுப்படுத்த, சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கியமான காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஆரம்ப நிலையிலேயே வைத்தியரை நாடவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.