பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார்.

குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பா.ஜனதா அரசை மிக கடுமையாக சாடினார்.

இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

இதற்கிடையே கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல அவர் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய தொடக்கம் தொடங்கிவிட்டது. அதிக பொறுப்புகள் வந்துள்ளன. உங்கள் அனைவரது ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். தொகுதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு முக்கிய தொகுதியில் அவர் களம் இறங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்ததும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. டுவிட்டரில் அவர் தகவல் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரம் பேர் அந்த பதிவுக்கு “லைக்“ போட்டு இருந்தனர். அதே சமயத்தில் எதிர்மறை கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net