பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு – 85 உயிரிழப்பு, 25 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறையின் ஊடக பேச்சாளர் (புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது.
இதில் அங்குள்ள 300க்கும் மேற்பட்ட ஊர்கள் பலத்த சேதமடைந்தன. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதன் காரணமாக அதிகளவான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பும் முடங்கியது.
இந்தநிலையில் மண்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 85 ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதில் கிழக்குப் பகுதியிலுள்ள பிகோல் பகுதியில், அறுபத்து ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிழக்கு விசயாஸ் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 25,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் காணாமற்போன 20 பேரை தேடும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கமரின் சூர் மாகாணத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் 50 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.