தந்தை வழியில் நாட்டு மக்களுக்காக முழு மூச்சாகப் பணியாற்றுவேன்!
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் அரசியல்யாப்பினை புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு திருட்டு வழியில் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களை ஜனநாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இந்த நாட்டை சூரையாடியவர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் திருட்டு வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டு திருட்டுத்தனமான அமைச்சுக்களை உருவாக்கி விட்டு மீண்டுமொருமுறை நாட்டை சூரையாட தயாரானார்கள்.
அந்த திருடர் கூட்டத்தை ஜனநாயக வழியில் மக்களின் செல்வாக்கு மூலம் நாங்கள் துரத்தி விட்டோம்.
நாங்கள் அரசாங்கம் திருட்டுத்தனமான ஒப்பந்தங்கைளச் செய்துள்ளதாக திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் தற்போது கூறி வருகிறார்கள். நாங்கள் எப்போதும் மக்களின் நலன் சார்ந்து ஒப்பந்தங்களைச் செய்து அவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்.
வீதிகளைப் புனரமைப்பது, கடற்றொழிலாளர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தவும், விவசாயிகளை மேன்மையடைய செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தில் சென்று ஒப்பந்தங்களை செய்துள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சிலர் நிதி மோசடி, பதவி மோசடி, அபிவிருத்தி மோசடி ஒப்பந்தங்களை செய்தார்கள். அவர்கள் சொந்த குடும்பங்களின் வயிறுகளை வளர்ப்பதற்காகவும் ஒப்பந்தங்களைச் செய்தார்கள் இவர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை.
திருட்டு ஒப்பந்தங்களைச் செய்தவர்களை நாட்டின் மக்கள் அடையாளம் கண்டார்கள் அவர்களை மக்களின் சக்தியைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் ஓரம் தள்ளி அவர்களின் திருட்டு ஒப்பந்தங்களை கிளித்து குப்பையில் போட்டு விட்டோம்.
இந்த மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, அமீர் அலி ஆகியோர் இலஞ்சங்களுக்கு துணை போகாதவர்கள் ஜனநாயகத்தின் பால் அன்பு கொண்டு உறுதியாக இருந்தார்கள் இடையில் உருவாக்கப்பட்ட திருட்டுத்தனமான அரசாங்கத்துடன் இணையாதவர்கள்.
காசுக்கு விலை போகாத மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் காணப்படக் கூடிய வீட்டுப் பிரச்சினைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்தி செய்து தருவேன்.
எனது தந்தை இந்த நாட்டின் வளர்சிக்காக உழைத்து உயிர்த் தியாகம் செய்தவர் அந்த வழியில் நானும் நின்று இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழு மூச்சாகப் பணியாற்றுவேன் என்றார்.