ஶ்ரீலங்காவை ICC க்கு பாரப்படுத்த பிரிட்டன் எம்பிக்களிடம் வலியுத்துகின்றது நாடு கடந்த தமிழீழ அரசு!
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) நிறுத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகின்றனர் அந்த வகையில் Portsmouth South தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Stephen Morgan அவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நெறிப்படுத்தலில் நா.க.த.அ செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன், டக்ளஸ் மென்டிஸ் அற்புதம், ஆகியோர் கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள் , அரசியல் கைதிகளின் விடுதலை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 21 சிறுவர்கள் உட்பட 276 மனித எலும்மபுக்கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாகவும், எடுத்துரைக்கப்பட்டதுடன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற ஐநா மனித உரிமைகள் சபையின் 39வது கூட்டத்தொடரில் பேசப்படும் சாதக பாதக விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (international criminal court) இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்பட்டதுடன் எதற்காக இலங்கையை பரிந்துரைக்க வேண்டும் என்பது பற்றிய மனு கையளிக்கப்பட்டதுடன் ஐ. நா மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட 30/1 ,34/1 தீர்மானங்களானது எந்தளவிற்கு இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பான இலங்கையின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் ( Sri Lanka Monitoring and Accountability Panel) அறிக்கையும், வழங்கப்பட்டது.
இலங்கையிலுள்ள பிரச்சனைகளை தொடர்ச்சியாக கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையை ICC க்கு கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்ட மனுவினை ஏற்று தாம் அதனை ஆதரிப்பதாகவும் அடுத்து வருகின்ற பாராளுமன்ற அமர்வுகளில் இந்த விடயம் தொடர்பாக கேள்விகளை முன்வைப்பதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.