கிழக்கில் கூட்டமைப்பிற்கே முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும்!
கிழக்கில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்கின்ற அச்சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு ஆதரவளிக்கவேண்டும்.
மாறாக அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனைச் செய்ய மறுக்குமாக இருந்தால் அது அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகமாகத்தான் இருக்கும்.
தற்போது மத்திய அரசாங்கத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.
ஆகவே எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையில் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.