கொழும்பில் முகாமிடும் அரசியல் கட்சிகள்!

கொழும்பில் முகாமிடும் அரசியல் கட்சிகள்!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் நாளையும் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளன.

புத்தாண்டில் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றக்குழுக் கூட்டம் என்பதால் இதில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் கட்சி தலைமையகத்தால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், அரசமைப்பு பேரவையின் பணி, நாடாளுமன்றத்திலும், தேசிய மட்டத்திலும் பிரதான எதிர்க்கட்சியின் அரசியல் வகிபாகம் என்பவை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அல்லது நாளை காலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

அமைச்சுகளுக்கான விடயதான ஒதுக்கீடு, எம்.பிக்களுக்கிடையிலான கருத்து மோதல், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், ஊரெழுச்சி வேலைத்திட்டம் உட்பட மேலும் சில விடயங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தாண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

எனவே, வடக்கு, கிழக்கில் இருந்து கூட்டமைப்பு எம்.பிக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மதியம் கொழும்பு வரும் பட்சத்தில் புதன்கிழமையே கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net