மதீப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு – பொது மக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மதீப்பீடு செய்யப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இரத்தினபுரம் கிராமத்தில் உள்ள கிருஸ்ணர் ஆலய வீதி மிகவும் மோசமானதாக காணப்படுகிறது.
இதுவரை காலமும் குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை, இந்த நிலையில் அரசின் கம்பொரலிய திட்டத்தின் கீழ் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு புனரமைப்புக்கு ஒப்பந்தகாரர்களிடம் வழங்க்கப்பட்டது. ஒப்பந்தம் வழங்க முன் குறித்த வீதியில் புனரமைப்புக்கு உட்பட்டும் பகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டது.
மதிப்பீட்டின் போது வீதியின் மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட்ட பகுதியே மதிப்பீடு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட குறித்த பகுதியை விடுத்து அதே வீதியில் சீராக காணப்படுகின்ற பகுதி புனரமைக்கப்படுகிறது.
இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவரும் மதீப்பீடு செய்யப்படாத பகுதியே புனரமைப்புச் செய்யப்படும் என்றும் இடையூறு ஏற்படுத்தினால் வீதி அபிவிருத்தி நிறுத்தப்பட்டு திருப்பப்படும் எனத் தெரிவித்தார் என்று இரத்தினபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்
எனவே உரிய பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.