மைத்திரியின் கையில் முடிவு!

மைத்திரியின் கையில் முடிவு!

ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய தேர்தலில் தாமும் ஒரு வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுவார் என்றால் மாத்திரமே அவர் முற்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும், இல்லையேல் இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசம்பர் 10ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் அந்தத் தேர்தலை தேர்தல் ஆணையாளர் அறிவித்து நடத்தும் வரைக் காத்திருக்க வேண்டும் என்றும் சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே நடத்தப்பட வேண்டும் என்பது அரசமைப்பு விதிமுறையாகும். எனினும், பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி, அடுத்த தடவையும் மக்களால் தெரிவு செய்யப்படும் சட்டத் தகுதி உடையவராயின், தமது முதலாவது பதவிக் காலத்தில் நான்கு வருடங்களின் முடிவின் பின்னர், தமது அடுத்த பதவிக்காலத்துக்கான மக்களின் ஆணையைப் பெறுவதற்காக முற்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்று அரசமைப்பு கூறுகின்றது.

அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலத்தில் முதல் நான்கு வருடங்கள் நாளையோடு முடிவடைகின்றது.

அடுத்த தடவையும் தாம் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகும் எண்ணம் அவருக்கு இருக்குமானால் அதற்காக நாளைக்குப் பிறகு ஒரு திகதியில் முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து, அத்தேர்தல் மூலம் தமது அடுத்த ஜனாதிபதி பதவிக் காலத்துக்கான ஆணையை மக்களிடம் கோர அவர் விழையலாம்.

இல்லையேல், தமது தற்போதைய பதவிக் காலத்தின் முடிவில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டும் அவர் அந்த ஆணையைப் பெற்றுக்கொள்ளலாம்.

2015 ஜனவரி 09 இல் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐந்து வருடப் பதவிக் காலம் 2020 ஜனவரி 08ஆம் திகதி முடிவுறுகின்றது. அதற்கு ஆகக் கூடியது 2 மாதத்துக்கு முன்பாகவும் அல்லது ஆகக் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்பாகவும் உள்ளதான ஒரு திகதியில் இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி பார்த்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமும் அடுத்த தேர்தலில் போட்டியிடுகின்றமையை இலக்காக வைத்து முற்கூட்டியே தேர்தலை நடத்த முன்வராவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் 8ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் நடைபெறும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே அறிவிக்கின்றமை குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்றார் எனச் செய்திகள் வெளியாகி வரும் பின்னணியில் குறைந்த பட்சம் சுயேச்சை வேட்பாளராகத் தன்னும் அவர் அத்தேர்தலில் போட்டியிடுவார் என்றால் மட்டுமே அப்படி அவர் முற்கூட்டியே தேர்தலை நடத்தும் அறிவிப்பை விடுக்க முடியும் எனவும் சட்டவட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net