வவுனியாவில் அம்மாச்சி உணவகம் முன்பாக புதிதாக முளைத்துள்ள மதுபானக் கடை! மக்கள் விசனம்!
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதனால் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே வடக்கை பொறுத்தவரையிலே வவுனியாவில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாக பொது அமைப்புக்களும், பெண்கள் நலன் சார்ந்த அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலையிலே புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று திறந்து வைக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற காலம் தொடக்கம் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ள நிலையில், ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த பழைய மதுபானசாலையின் அனுமதி பத்திரத்தை வைத்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே போதிய வசதிகளற்ற சன நெருக்கடியான நிலையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அதைவிடவும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாக இந்த மதுபானசாலை திறந்து வைத்திருப்பது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு இந்த மதுபானசாலை அமைந்தது தொடர்பில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை எனவும் இது நமது கலாச்சாரத்தையும், தமது இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும்.
பியரை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாகவோ அல்லது ஒழுங்கைகளுக்கு முன்பாகவோ குடித்துவிட்டு அதனை வீடுகளுக்கு வீசுவதற்கும், சமூக சீர்கேடுகளுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் இவ் விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அதற்கான எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லையெனவும் ஏற்கனவே இருந்த மதுபானசாலை மட்டுமே புதுப்பிப்பதற்கான அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்றைய தினம் திங்கள்கிழமை ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.