ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன.
குறிப்பாக, களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 120ஆவது ஆண்டு பிறந்த தின நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு- காலி முகத்திடத்திலுள்ள பண்டாரநாயக்க சிலைக்கு முன்னால் இடம்பெறவுள்ள நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
கடந்த 2015ஆம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.
அத்தேர்தலில், 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.
பின்னர் 2015 ஜனவரி மாதம் 9ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து, அவர் மிகவும் எளிய முறையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.