தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி!
தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் சுயலாபம் ஈட்டுவதற்காகப் பல்வேறு நிகழ்வுகள் இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவித்துள்ளார்.
உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிவசாய அமைப்புகள், பொதுமக்கள் இந்த இடத்திலே தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதன் விளக்கத்தை ஆழமாகக் கருத்தில் எடுக்க வேண்டும். கடந்த மஹிந்தவின் காலத்தில் மிகவும் மோசமான முறையில் காணி அபகரிப்பு, காணி கபளீகரம் என்பன எமது முன்னாள் அமைச்சர்கள் இருக்கின்ற போதே மிகவும் சூட்சுமமாக இடம்பெற்றன.
அந்த நேரத்தில் எமது சகோதர அமைச்சர்கள் ஊத்துச்சேனை, வடமுனை போன்ற சில பிரதேசங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதனை அப்போது இருந்த தமிழ் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் இருந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து அந்த விடயத்தை முறியடித்தது.
தற்போது ஒரு சுமூகமான அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையில் முன்னுதாரணமான செயற்பாடாக இந்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான விடயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நாங்கள் வெறுமனே முட்டுக் கொடுக்கின்றவர்கள் மாத்திரம் அல்ல. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அமைச்சோடு தொடர்பு கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்திற்கு முறையான தீர்வினை அவர்கள் பெற்றுத் தருவார்கள். இன்று வழங்கப்பட்டிருக்கும் ஆளுநர் நியமனம் எவ்வாறு இடம்பெற்றது என்று அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு திட்டமிட்டு பல நடவடிக்கைகளைச் செய்பவர் இந்த நாட்டின் ஜனாதிபதி. எமது தமிழ் முஸ்லிம் உறவினைப் பாதிக்கும் ஒருவரை, குறிப்பாக இந்த அரசாங்கத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை அரசியற் தலைமைத்துவத்திற்குக் கொண்டு வருகின்ற செயற்பாட்டை அவரே மேற்கொள்கின்றார்.
இவ்வாறான நடவடிக்கை மூலம் எமது தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி அவர்கள் அரசியற் சுயலாபம் ஈட்டுவதற்காகவே இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் எமது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.