இலங்கை எதிர் கொள்ளும் மூன்று பேராபத்துக்கள்! மகிந்த எச்சரிக்கை!
நான்கு வருடங்களிற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 3 ஆபத்துக்களை நாடு எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச எதிர்க் கட்சித் தலைவரானதன் பின்னர் வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. நான்கு வருடங்களிற்கு முன்னர் அதாவது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பாக பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து. கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகிறது.
19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.
இதேவேளை, புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்த ஆபத்துக்கள் அனைத்தையும் தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.