சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பசில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பலர் சிங்கள இனவாதத்தை மிகவும் வலுப்படுத்தி ஆட்சி வர மேற்கொள்ளும் முயற்சிகள் மாற்றிக்கொள்ளப்பட வேண்டியது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு உள்ள பிரச்சினைகளை சாதாரணமாக தெளிவுப்படுத்த முடியாது எனவும் சிறுபான்மை இனத்தவராக மாறும் போதுதான் அந்த கஷ்டம் புரியும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி – நீங்கள் இனவாதமற்ற அரசியலில் ஈடுபடுவது பற்றி கூறினாலும் பொதுஜன பெரமுனவில் இருக்கும் பலர் சிங்கள இனவாதத்தை வலுப்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனரே?.
பதில் – இதனை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். யார் என்ன கூறினாலும் நான் இனவாதத்தை விரும்பவில்லை. எந்த இனத்திற்கு அநீதி ஏற்படும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.
சமநிலைமை ஏற்படுத்தும் சட்டப் பின்னணியை உருவாக்க வேண்டும். இலங்கையில் இனங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சினைகள் என்ன என்று என்னிடமும் கேட்டுள்ளனர்.
அனைவருக்கும் சம உரிமைகள் இருக்கின்றது தானே என்று கேட்கின்றனர். எனினும் சிறுபான்மையினருக்கு இருக்கும் பிரச்சினை என்ன என்பதை இலகுவாக தெளிவுப்படுத்த முடியாது.
சிறுபான்மையினராக மாறும் போதுதான் கஷ்டத்தை புரிந்துக்கொள்ள முடியும். நான் வேறு நாடுகளின் சிறுபான்மை இனமாக இருந்து அந்த அனுபவத்தை பெற்றுள்ளேன்.
எவராவது அரசியல் ரீதியாக ஆட்சிக்கு வர இனவாதத்தை பயன்படுத்துவார் எனில் நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அத்துடன் முடிந்தளவுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும். அதிகாரத்தை பகிர வேண்டும் என்பது மக்களுக்கு பணியாற்றும் உரிமை வழங்குவது.
கேள்வி – அதிகார பரவலாக்கம் என்பது சிறுபான்மையினர் மத்தியில் அடிக்கடி பேசப்படுகிறது. எனினும் பொதுஜன பெரமுன அதனை உணர்கிறதா?.
பதில் – எதிர்காலத்தில் எமது கட்சி கிராம் கிராமாக செல்ல எதிர்பார்த்துள்ளோம். 25 ஆயிரம் கிராமங்களுக்கு சென்ற கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
இந்த பிரச்சினை தீர்க்க மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம். சர்வதேச நாடுகளிடம் முன்னுதாரணங்களை பெறவேண்டும். முடிந்தளவுக்கு அதிகாரங்களை பரவலாக்க வேண்டும்.
அதிகார பரவலாக்கல் என்பது மக்களுக்கு பணியாற்றும் உரிமையை வழங்குவது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.