கிளிநொச்சியில் இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பாடசாலையில் மாணவனுக்கு அனுமதி வழங்காத விடயம் வலயக் கல்விப் பணிப்பாளர், இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலம் ஆகிய பாடசாலை அதிபர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பானை அனுப்பட்டுள்ளது.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை 11-01-2019 காலை பத்து மணிக்கு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் அழைப்பானை அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஐந்து வரை கல்வி பயின்ற கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு பின் புறமாக வசிக்கின்ற த. குயிலன் என்ற தனது மகனுக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் அனுமதி கேட்டு சென்ற போது தரம் ஆறுக்கு சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பில் வலயக் கல்விப் பணிமனையிடம் முறையிட்ட போது அவர்களும் எதுவும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்து தந்தை க. தங்கவேல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமைக்கு அமைவாக இவ் அழைப்பானை அனுப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை சுட்டடிக்காட்டத்தக்கது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net