அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பெற்றிருந்தார்.

இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

மூத்த சட்டத்தரணியும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக செய்திகள் வௌியாகி வருகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தீர்மானிப்பேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றில் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்? யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார்? யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்? அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார்? ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது.

அந்த பெண் நான் என்று கூறவில்லை. அமெரிக்க மக்களை பற்றி கூறுகிறேன். அதே சமயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நான் முடிவு எடுப்பேன் என்று குறிப்பிட்டார்.

இந்த செவ்வியின் போது கமலா ஹாரிஸ் ஜனாதிபதி ட்ரம்பை விமர்சிக்கவும் தவறவில்லை. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப் குழந்தையை போல் நடந்துகொள்கிறார் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

“மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் முடிவு அமெரிக்க மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது.

ஜனாதிபதியின் தற்பெருமையை வௌிக்காட்டும் திட்டத்துக்காக 8 லட்சம் அரசு ஊழியர்களை தொழிலுக்கு செல்லவிடாமல் முடக்கி வைத்திருப்பது தவறான செயலாகும்” என தெரிவித்தார்.

மேலும் “அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்துவது, 11 வயதான என்னுடைய பேரன் அவனுடைய பொம்மை காரை கேட்டு அடம் பிடிப்பதை போல் உள்ளது” என கிண்டல் செய்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net