செம்பியன்பற்று இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை!
யாழ்ப்பாணம் செம்பியன்பற்று பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை என்றும் பொய்யான விடயங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) முற்பகல் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 3ஆம் திகதி செம்பியன்பற்று பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் கஞ்சா காணப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்குமாறு சுமந்திரன் அழுத்தம் கொடுத்ததாகவும் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், குறித்த விடயம் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
செம்பியன்பற்று பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்களை அங்குள்ள இளைஞர்கள் மடக்கிப்பிடித்து அடையாள அட்டையை கேட்டபோது, அவர்கள் துப்பாக்கியை மட்டுமே காட்டியதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறிச்சென்றதால் இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளதோடு, இராணுவத்திற்கும் அறிவித்துள்ளார்கள். இராணுவம் அவர்களது வாகனத்தை மறித்து உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக சுமந்திரன் விளக்கினார்.
அவர்கள் உண்மையான பொலிஸார் என பின்னர் அறியப்பட்டபோதும், இளைஞர்கள் தம்மை தாக்கியதாக பொலிஸார் முறைப்பாடு செய்ததால் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தாம் பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக விசாரித்ததாக குறிப்பிட்டார்.
இதேவேளை, அந்த இளைஞர்களிடம் கஞ்சா இருக்கவில்லை என்றும், அவர்கள் விடுவிக்கப்பட்டதை மறுநாளே தாம் கேள்விப்பட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.
எனினும், அந்த இளைஞர்களிடம் கஞ்சா காணப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்குமாறு தான் அழுத்தம் கொடுத்ததாகவும் வெளியான செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையென சுமந்திரன் கூறினார்.