ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது!

இலங்கையில் ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது!

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளதென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எங்கள் இனத்தின் மீதான படுகொலைகளின் நினைவேந்தல்களை அனுஸ்டிக்க தடைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் என்றோ ஒரு நாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பி அதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களுக்கு ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமையை அனுபவிப்பவர்களாக தென்னிலங்கை பேரினவாதிகளே உள்ளனர்.

இவ்வாறான நினைவேந்தல்கள் ஊடாகவே எமக்கு அடுத்து வரும் சந்ததிகள் நாம் எவ்வாறான அடக்கு முறைக்குள் வாழ்ந்தோம், எதனால் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது எனும் வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net