சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா!
சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியிலிருந்து நேற்று திடீர் இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை செயலாளருக்கு தனது இராஜினாமா கடிதத்தை இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில்,
“என்னுடைய பணிக்காலம் கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனினும் 2019ஆம் ஆண்டு இம்மாதம் 31ஆம் திகதி வரை சி.பி.ஐ. இயக்குனராக மட்டுமே பணி நீட்டிக்கப்பட்டது.
தற்போது அது இல்லாத நிலையில் தீயணைப்பு துறைத்தலைவருக்கான வயது வரம்பு கடந்து விட்டது. எனவே இன்று முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதப்பட வேண்டும்” என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனால் சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையிலான மோதலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் தனது பதவி நீக்கம் தொடர்பாக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா 77 நாட்களுக்குப் பிறகு கடந்த 9ஆம் திகதி மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை கடந்த 8ஆம் திகதி உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவரை மீண்டும் அப்பதவியை தொடர்வதற்கு அனுமதி வழங்கியது.
இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சி.பி.ஐ இயக்குநராக அலோக் வர்மா கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.