மைத்திரி- கோட்டா கொலை சதி: பூஜித்தவுக்கு அழைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொலை சதி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலியங்க, சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் கோட்டபாய ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்தியுள்ள தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காகவே பூஜித்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாமல் குமாரவினால் வெளிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மற்றும் கோட்டபாய தொடர்பிலான கருத்து இன்னும் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.