புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன்!
சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் விமர்சிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பேசிய அவர்,
“சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் விமர்சிக்கவில்லை.
அந்தந்த சூழலிலே அவர்கள் எடுத்த தீர்மானம் அது. அந்த சூழலுக்கு போய் நாம் தீர்வைக் காணமுடியாது. ஆனால் இதுவரை நாம் தவறவிட்ட அந்த படிப்பினைகளை வைத்து இன்னுமொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமா?
இன்று உலகில் ஒரு நாடு கூட தவறாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் போர் நடந்த காலத்தில் 33 நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று தீர்மானித்தது. இப்போதுள்ள ஆதரவு அன்று இருக்கவில்லை.
ஆனால் இன்றுள்ள இந்த சாதகமான சூழ்நிலையை எமது மக்களுக்காக உபயோகிக்கப் போகின்றோமா என்பது தான் இன்று இருக்கும் கேள்வி.
சர்வதேச சமூகம் இன்றைக்கு எங்களோடு நிற்கிறார்கள். புதியதொரு அரசியலமைப்பை கொண்டுவருவோம் என்று சொல்லி 2015 ஆம் ஆண்டு உலகுக்கு வாக்குறுதி கொடுத்தது இலங்கை அரசாங்கம்.
அதிலும் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவோம் என்று இலங்கை அரசாங்கம் உலகத்துக்கு கொடுத்த வாக்குறுதி அது.
அதனை நிறைவேற்றப்பண்ணுவது எப்படி என்பதே இன்றைய சூழலில் உள்ள கேள்வி.
2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சிலே தெட்டத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார் தமிழ் மக்களின் அரசிலயல் பிரச்சினைக்கு தீர்வாக,
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக பேசும் போது மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பினைக் கொண்டுவருவோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலக நாடுகளுக்கு பலமுறை கொடுத்த வாக்குறுதி என்ன? இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதி என்ன? நாடாளுமன்றத்தில் பேசிய தலைவர் சம்பந்தனும் இதனை மீளவும் நினைவுபடுத்தியிருக்கிறார்.
அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாகக் கொடுப்பேன். பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன். அதுமட்டுமல்ல அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவேன் என்றார் மகிந்த.
இந்நிலையிர், கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார்.