யாழில் வகுப்பறையில் போதையேறி மயங்கிக் கிடந்த மாணவர்கள்!

யாழில் வகுப்பறையில் போதையேறி மயங்கிக் கிடந்த மாணவர்கள்!

யாழ்ப்பாணம், வலி. வடக்கு பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் வகுப்பறையில் போதை மாத்திரையைப் பயன்படுத்தி மயங்கிக் கிடந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதிக போதையின் காரணமாக இயங்காநிலையில் மயங்கிக் கிடந்த இவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த இரு மாணவர்களும் தெல்லிப்பளையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவன், தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து 20 போதை மாத்திரைகளை பெற்றுள்ளார்.

பாடசாலைக்குச் சென்ற அவர்கள் 12 மாத்திரைகளைப் பங்கிட்டு உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் போதையேறி மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் தகாதவார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். நிலைமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழு வைத்தியசாலைக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டது.

அந்த விசாரணையில், இவ்வாறான போதை மாத்திரைகள் அவர்களது அயலிலுள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தாம் பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாணவரொருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாவிட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள குறிப்பிடப்பட்ட மருந்தகங்களுக்குச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குழு அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டு போதை மாத்திரைகளைக் கைப்பற்றியது. குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net