தன் குடியுரிமையைக் கைவிடுகிறார் கோத்தபாய?

தன் குடியுரிமையைக் கைவிடுகிறார் கோத்தபாய?

கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் அவரின் தனிப்பட்ட விடையம் என்பதனால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என அவரின் பேச்சாளர் மறுத்துள்ளார்.

அடுத்துவரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாகவும், இதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான ஆவணங்களை கையளித்துள்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில், வெளியாகியுள்ள செய்திகள் உண்மையா என கோத்தபாயவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்சவிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள அவர், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது. இது தனிப்பட்ட விடையம். அதனை பகிரங்கப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச சமர்ப்பித்துள்ள குடியுரிமை இரத்துச் செய்யும் ஆவணங்கள் தொடர்பாக, தகவல்களை அனுப்புமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும் பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அத்தகைய எந்த ஆவணமும் கிடைத்ததா என்பது பற்றி அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்த மறுப்புத் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் குடியுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அண்மையில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையினைப் பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கனவில் அவர் இருப்பதாகவும் இதற்காக அவர் தன்னுடைய இரட்டைக் குடியுரிமையினை இரத்துச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்றும் அவரை மேற்கோள்காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரின் பேச்சாளர் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net