தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி!
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது. எல்லோராலும் வைத்திய கலாநிதிகளாகவோ, பொறியியலாளர்களாகவோ வர முடியாது.
ஆகவே வர்த்தக, கலை துறைகளுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ் மாணவர்கள் அதிக அளவில் கூடுதல் சிறப்பு புள்ளிகள் மற்றும் அடைவுகளை பெறவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அதேவேளை வெளிநாட்டு புலமை பரிசில்களுக்கு தமிழ் மாணவர்கள் பொதுவாக விண்ணப்பிப்பதில்லை. இவற்றுக்கு விண்ணப்பிக்குமாறும் இவர்களை ஊக்குவிக்க வேண்டி உள்ளது.
வெகுவிரைவில் இந்திய புலமை பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன். தரம் 05மாணவர்களை புலமை பரிசில் பரீட்சை என்ற பெயரால் வதைக்காதீர்.
அது பெற்றோர்களின் கௌரவத்தை நிலை நாட்டுகின்ற போட்டியாக மாறி உள்ளமை கவலை தருகின்றது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.