தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரன்!
வடக்கு அபிவிருத்தி அமைச்சினை தமது கோரிக்கைக்கு அமைய, பிரதமர் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலே அவ்வாறான அமைச்சினை பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் எவ்வாறு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு அபிவிருத்தி அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
தங்களின் ஆலோசனைக்கமையவே பிரதமர் அதனை பெற்றுக் கொண்டார். தங்களின் கோரிக்கைக்கமைய வடக்கு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை ஒன்றின் நியமிப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டால் கூட்டமைப்பு நிச்சியம் ஆளும் கட்சியில் ஆசனம் பெற வேண்டும்.
எதிர்க்கட்சியில் கூட்டமைப்பு அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.