‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ ஆனால் தமிழ் மக்களுக்கு மங்கலாகவே தெரிகின்றது!
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள் ஆனால், தமிழ் மக்களுக்கு வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைத்திருநாளை கொண்டாடிக்கெண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தைத்திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘அரசியல் யாப்பு, தேர்தல்கள், ஜெனிவாக்கூட்டங்கள் எல்லாமே தமிழ் மக்களுக்கு மங்கலான பாதைகளையே காட்டி நிற்கின்றன.
எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள்கூட பல விதங்களில் பிரிந்தே காணப்படுகின்றனர்.
அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக இன்னும் பல வழிகளில் எமது மக்கள் பிரிந்தே நிற்கின்றார்கள்.
மேலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக பல இடங்களில் எம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்கள்.
இவ்வாறான சூழலிலே ஆதவன் தைத்திருநாளில் மேலெழுந்துள்ளான். இதுவரை அவன் செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்தும் இந்நாளில் இனிவரும் காலத்தில் மங்கலான பாதைகளுக்கு ஒளியூட்ட அவனிடம் இறைஞ்சுவோம்.
தமிழர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒன்றுபட்ட வாழ்க்கையைக் கொடுத்து நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அவர்களுக்கு அவன் அருள வேண்டும்’ என மேலும் தெரிவித்துள்ளார்.