புதிய அரசியலமைப்பிற்கு ஐ.தே.க. எதிர்ப்பு!
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் காணப்படுவதாக வட.மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்த புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தெற்கிலும் வடக்கிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. அதிலும் அரசியல் தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர்களின் அறிக்கைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய வரைபாக இல்லாவிட்டாலும் அதில் இன்னும் எமக்குத் தேவையான சில சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன.
ஆகவே மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதன் உண்மையைச் சொல்வதற்கு புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் தயங்குகின்றனர்.
ஆகவே இந்த அரசமைப்பு தொடர்பில் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.