கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 16 ஆட்சேபனைகளில், ஓரேயொரு ஆட்சேபனை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அனைத்து ஆட்சேபனைகளையும் புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே. மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வர் போட்டியிடவுள்ளதாக தேர்தல் செயற்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், உப செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கிஹான் வீரசிங்க, குறித்த பதவிக்கான தகைமைகளைக் கொண்டிருக்காத காரணத்தால் அதை புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை தேர்தலில் 7 முக்கிய பதவிகளுக்காக 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆறு பேரின் வேட்பு மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதில் உப தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அதே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய பிரமோத்ய விக்ரமசிங்க, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதர செனரத் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், குறித்த வேட்பு மனுக்களுக்கு எதிராக விசாரணைகளின் போது எந்தவொரு எதிர்ப்புகளும் முன்வைக்கப்படவில்லை. இதனால் குறித்த 6 பேருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தேர்தல் குழு தீர்மானித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே. மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வரது வேட்பு மனுக்களையும் தேர்தல் செயற்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியிருந்ததுடன், அவரது தரப்பில் முன்னாள் உப தலைவர்களுள் ஒருவரான மொஹான் டி சில்வா மற்றும் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
எனினும், தலைவர் பதவிக்கு கடைசி நேரத்தில் சுமதிபால தரப்பில் இருந்து ஒருவர் மாத்திரம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் விபரம்
தலைவர் பதவி (ஒரு பதவி) – மொஹான் டி சில்வா, ஜயந்த தர்மதாச, கே. மதிவாணன், சம்மி சில்வா
உப தலைவர் பதவி (2 பதவி) – சம்மி சில்வா, ரவீன் விக்ரமசிங்க, கே. மதிவாணன், அர்ஜுன ரணதுங்க, பிரமோத்ய விக்ரமசிங்க, மொஹான் டி சில்வா
செயலாளர் பதவி (ஒரு பதவி) – பந்துல திசாநாயக்க, நிஷாந்த ரணதுங்க, சம்மி சில்வா, மொஹான் டி சில்வா
உப செயலாளர் பதவி (ஒரு பதவி) – கிரிஷாந்த கபுவத்த, பந்துல திசாநாயக்க, ரவீன் விக்ரமரத்ன, ஹிரந்த பெரேரா
பொருளாளர் பதவி (ஒரு பதவி) – லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சம்மி சில்வா
உப பொருளாளர் பதவி (ஒரு பதவி) – லலித் ரம்புக்வெல்ல, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதர செனரத்