சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும், அமைச்சர் ராஜிதவும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தியதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை.
” சுகாதார விவகாரம் குறித்தே எனக்கும் சங்ககாரவுக்கும் இடையில் சுமார் 10 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்தும், பொது வேட்பாளர் சம்பந்தமாகவும் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவையாகும்.
இதேவேளை, சங்ககார சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் அதை விளையாடலாம். நாட்டில் ஜனாதிபதி யார் என்பதை அவரால் தீர்மானிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.