ஜனாதிபதி நினைத்தால் வேட்பாளராக களமிறங்க முடியும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் வேட்பாளராக களமிறங்க முடியும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாதுக்கை பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறும். இதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் அறிவிக்கப்படும்.
ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்குவதாக இருந்தால், அவருக்கு இப்போதுகூட ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல முடியும்.
எனினும், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது. தென் மற்றும் மேல் மாகாணங்களைத் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களும் காலாவதியாகி பல மாதங்கள் கடந்து விட்டன.
மேல் – தென்மாகாணங்களின் காலமும் மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றன. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நாம் இந்தத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகிறோம்.
எனினும், அரசாங்கமோ தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவந்து இதனை எப்படியேனும் பிற்போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இதுதொடர்பில் இரண்டு மாதங்களில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு காலம் வழங்கப்பட்டது.
ஆனால், இதுவரை அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதாவது, வேண்டுமென்றுதான் இவர்கள் இந்தத் தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றே இதன் ஊடாகத் தெரிகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.