அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்!
புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகளை இந்த அரசு உதாசீனம் செய்கின்றது. அவசரப்பட்டு புதிய அரசமைப்பை கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாகவுள்ளது. இதில் எமக்கு பலத்த சந்தேகங்கள் உள்ளன.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தை சென்றடைகின்றது. முதலில் அதை உயர்த்த வேண்டும். அதைவிடுத்து அர்த்தமற்ற புதிய அரசமைப்பை கொண்டு வருவதில் எவ்வித பயனும் இல்லை.
முதலில் புதிய அரசமைப்பு பணியை அரசு கைவிட வேண்டும். இல்லையேல் நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டங்கள் வெடிக்கும். மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக இந்தப் போராட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
நாட்டைத் துண்டாக்க நாம் ஒருபோதும் இடமளியோம். நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தினர் சிந்திய குருதி வீண்போக விடமாட்டோம்.
புதிய அரசமைப்பை தமிழ் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்களும் விரும்பவில்லை. சிங்கள மக்களும் அதை அடியோடு நிராகரிக்கின்றார்கள்.
இந்த நிலையில், எதற்குப் புதிய அரசமைப்பு? ரணில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் விருப்பத்துக்கு இணங்க நாட்டின் அரசமைப்பை மாற்றியமைக்க முடியாது.
முதலில் நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லுமாறு இந்த அரசுக்கு சவால் விடுகின்றேன். அதன் பின்னர் ஆட்சியமைக்கும் அரசு புதிய அரசமைப்பு தொடர்பில் சிந்திக்கட்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.