பிலிப்பைன்ஸுடன் புதிய பாதையில் பயணிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்க்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தனது இந்த விஜயத்தினூடாக இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகால நம்பிக்கையான நட்புறவொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இரு நாடுகளுக்குமிடையே கட்டியெழுப்பப்பட்ட அந்த புதிய நட்புறவினூடாக இரு நாட்டு மக்களினதும் சௌபாக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக இணைந்து பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது, வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பமாக அது அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.