வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதில் அரசும், தென்னிலங்கையிலிருந்து வரும் அதிகாரிகளும் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பின் பின்னான நிலமைகள் குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 25281 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து நிலமைகளை நேரில் பார்வையிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் இழப்பீடு மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ஆனாலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அவர்களுடைய கருத்துக்களுக்கு அல்லது உத்தரவுகளுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் 10,000 ரூபாய் இழப்பீடு வழங்குதென கூறப்பட்டது.

காரணம் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்லும் போது உண்டாகியிருக்கும் சேதங்களை ஈடு செய்வதற்கும் அந்த மக்கள் தம்மை ஓரளவுக்கு சுதாகரித்துக் கொள்வதற்குமாக அந்த பணம் மற்றும் ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

அதனை சகலரும் ஏற்றுக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் சுமார் 2 ஆயிரம் வரையான குடும்பங்களுக்கே 10,000 ரூபாய் இழப்பீட்டை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதிலும் அரைவாசி குடும்பங்களுக்கே அந்த 10,000 ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

மேலும் நெல் பூக்கும் பருவத்திலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டாகியிருந்தது. அதனால் பெருமளவு அழிவு உண்டாகியுள்ளது.

குறிப்பாக சுமார் 40 தொடக்கம் 50 மூடைகள் ஒரு ஏக்கருக்கு விளையும் நிலத்தில் இந்த அறுவடையில் 16 தொடக்கம் 20 மூடை நெல்லே அறுபடையாக கிடைத்துள்ளதாக விவசாயிகள் எமக்கு கூறுகின்றனர்.

ஆனால் விவசாய அழிவுகளை மதிப்பீடு செய்யவரும் அதிகாரிகள் வயலுக்குள் இறங்காமல் நெல் நன்றாக விளைந்திருப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார்கள்.

நெல் பார்ப்பதற்கு நான்றாக இருப்பதுபோல் தெரியும். ஆனால் ஒரு நெல்மணியை பிடுங்கி அதனை விரலால் நசுக்கினால்தான் உண்மை தெரியும்.

அதாவது பூக்கும் பருவத்தில் வெள்ளம் பாதித்ததால் அரிசி உருவாகாமல் வெறும் சப்பிகளே உருவாகியுள்ளன. அது வெளியில் இருந்து பார்த்தால் வயல் நன்றாக விளைந்திருப்பது போல் இருக்கும்.

ஆகவே அதனை கூர்மையாக அவதானித்து பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற அக்கறை தென்னிலங்கையிலிருந்து வந்திருக்கும் அழிவுகளை மதிப்பீடு செய்யும் அதிகாரிகளுக்கு இருப்பதாக இல்லை.

ஆக மொத்தத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி திட்டமும் இல்லை.

விவசாய அழிவுகளுக்கு இழப்பீடுகளும் இல்லை. மக்கள் வெறும் 1500 ரூபாய் உலர் உணவு நிவாரணத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பியிருக்கின்றார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இயங்கும் அனத்தமுகாமைத்துவ பிரிவும் மக்களுடைய இந்த நிலைக்கு ஒரு காரணம்.

அவர்களுடைய வினைத்திறன் அற்ற மந்த நிலையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உண்மையான பாதிப்பு நிலமை வெளிப்படுத்தப்படவில்லை. மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நிலமைகள் குறித்த ஆவணப்படுத்தலும் இல்லை.

இதனால் தென்னிலங்கையில் இருந்து மதிப்பீட்டுக்காக வருகிறவர்கள் விவசாயிகள் சொல்வதை கேட்காமல் அவர்கள் சொல்வதை விவசாயிகள் கேட்கும் நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

மேலும் வெள்ளத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக கிடைத்தது வீட்டு திட்டம் மட்டும்தான். அதாவது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 388 வீடுகள் பூரணமாகவும், 2225 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தது.

இவற்றில் பூரணமாக சேதமடைந்த வீடுகளை தலா 7 அரை லட்சம் ரூபாய் செலவி ல் மீண்டும் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வீடமைப்பு அமைச்சு கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 3756 Mukadu · All rights reserved · designed by Speed IT net