இரணைமடுவிலிருந்து 60 வீதமான நீரை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கை!
இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்துள்ளார்.
இதன்போது, தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், 60 வீதமான நீர் சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு.என்.சுதாகரன் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான விசேட செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் , வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்ததுடன் அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கிலேயே இன்று திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.