கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலையையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியினருடன் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாக சுமந்திரனே பகிரங்கமாக இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.
அமைச்சரவையின் முடிவுகளை எடுக்கும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாட வேண்டும் என்று நாடாளுமன்றிலும், வெளியிடங்களிலும் அவர் தெரிவித்து வருகிறார்.
இதற்கு அரசாங்கத்தரப்பிலிருக்கும் ஒருவர் கூட இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு நிராகரிக்க அரசாங்கத் தரப்பினருக்கு முதுகெலும்பில்லை.
அதையும் மீறி எவரேனும் ஒருவர் நிராகரித்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த தரப்புடன் பிரச்சினையில் ஈடுபடுவார். இதுதான் உண்மையான நிலைமையாகும்.
சமஷ்டிக்கு அப்பாற்பட்ட ஒன்றுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக சுமந்திரன் யாழில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இறுதி அமர்வின்போது உரையாற்றுகையில், தங்கள் கட்சியின் இணக்கப்பாட்டுடன்தான் அந்த அறிக்கை வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து நாம் வாக்களித்தவுடன், இதனை தமிழ் மக்களிடம் இனவாத பரப்புரையாக கொண்டுசெல்லவே அந்தத் தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.