ஐ.தே.க. அறிவித்த பின்னரே நாம் அறிவிப்போம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாரஇதழின் ஊடகவியலாளரினால், சமல் ராஜபக்ஷவும், கோத்தாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ”நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்.
நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக்கூடிய ஒருவரையே வேட்பாளராக தெரிவு செய்வோம். ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் எமது வேட்பாளர் யாரென்பதை அறிவிப்போம்” என பதிலளித்துள்ளார்.