நாட்டில் நிலவும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்!

நாட்டில் நிலவிவரும் தொடர் சீரற்ற காலநிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், காலையிலும் இரவிலும் குளிரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பம்பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.