பிலிப்பைன்ஸ் அரசு போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க தயார்!

பிலிப்பைன்ஸ் அரசு போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க தயார்!

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

இதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய நன்மையாக இந்த உதவி காணப்படுகின்றது.

பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பயணத்தின் இறுதி நாளான நேற்று (சனிக்கிழமை) பிலிப்பைன்ஸ் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அதன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பொலிஸ் சேவை பிரதானியான Oscar D Albayalde , அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் Catalino S cuy ஆகியோர் வரவேற்றனர்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான திறந்த யுத்தம் ஒன்றை தற்போது தனது தலைமையில் இலங்கை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

பூகோள முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு இலங்கை முக்கிய பரிமாற்ற மத்திய நிலையமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை தடை செய்வதற்கு அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருட்களை தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) முன்னெடுத்துள்ள முக்கிய போராட்டத்தை பாராட்டிய ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்த சேவையை மதிக்கும் வகையிலேயே தான் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விபரித்த ஜனாதிபதி, அத்தகைய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்தவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net