புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம்!
புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே சாலச்சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அரசியலமைப்பிற்கு அங்கே எதிர்ப்பு, இங்கே எதிர்ப்பு அது நடக்குமா? நடக்காதா? என்று சாஸ்திரம் பார்க்காது, அதனை அடைய செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு இருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தமை தொடர்பில் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருக்கின்ற எதிர்ப்பு என்று அவர் சொல்லுவது, வீணாக இதனை தலையில் சுமந்துகொண்டு தேர்தலில் தோற்று விடுவோமோ என்கின்ற பயமே அந்த கட்சிக்குள்ளே பலருக்கு இருக்கிறது.
ஆனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளோம்.
எனவே இதற்கு ஆதரவு இருக்கிறதா? இல்லையா? அல்லது வெற்றி பெறுமா? என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.