கச்சதீவு திருவிழா குறித்து முக்கிய கலந்துரையாடல்
வரலாற்று புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா குறித்த முக்கிய கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
கச்சதீவு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நாளை பிற்பகல் 2 மணிக்கு கலந்துரையாடவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பெருமளவானோர் கலந்துகொள்வர்.
அந்தவகையில், பக்தர்களுக்குரிய உணவு, தங்குமிடம் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு இந்த ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில், கச்சதீவு ஆலய பங்குத்தந்தை, நெடுந்தீவு பிரதேச செயலாளர், கச்சதீவு போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.